பாதிக்கப்பட்ட மாநிலங்கள் 10 ஆக அதிகரிப்பு: உத்தரகாண்ட், மகாராஷ்டிரா டெல்லியிலும் பறவை காய்ச்சல்

புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில், டெல்லி, உத்தரகாண்ட், மகாராஷ்டிராவிலும் அதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், டெல்லியிலும்  பறவை காய்ச்சல் பரவியது நேற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் பண்ணையில் 900 கோழிகள் கடந்த சனியன்று திடீரென இறந்தன. இவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் பறவை  காய்ச்சல் காரணமாக இவை இறந்தது உறுதியாகி இருக்கிறது. இதேபோல் டெல்லியிலும் பறவை காய்ச்சல் பரவி இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மயூர் விகார் பூங்காவில் இருந்து அனுப்பப்பட்ட 4 மாதிரிகள் சஞ்சய் லேக்  மற்றும் துவாரகாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு மாதிரியையும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இவற்றின் முடிவுகள் நேற்று தெரியவந்தது.  இதில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பறவைகள் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே போல, உத்தரகாண்டில் 200க்கும் மேற்பட்ட  பறவைகள் இறந்துள்ளன. பந்தாரி  பாக்கில் 121 காகங்கள் உட்பட டேராடூனில் 162 காகங்கள், 2 புறாக்கள்,  கழுகு  உள்ளிட்டவை இறந்துள்ளன. ரிஷிகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 30  பறவைகள் இறந்துள்ளன. இவற்றின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், பறவைக் காய்ச்சலால் பறவைகள் இறந்தது உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் பறவைக் காய்ச்சல் பாதித்த மாநிலங்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

* பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க உபியின் லக்னோவில் உள்ள நவாப் வஜித் அலி ஷா உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

* வெளி மாநிலங்களில் இருந்து கோழி இறைச்சி கொண்டு வர டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

* பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது, இதைப் பற்றி வதந்திகள் கிளப்ப வேண்டாம் என மத்திய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறி உள்ளார்.

Related Stories: