அரியர் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும்: பல்கலை கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரியர் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணையை பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை வழங்க தடைகோரி வக்கீல் ஒருவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளில் பதிலளித்த தமிழக உயர் கல்வித்துறை, அனைத்து பல்கலைக்கழகங்களிடமும் ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், நீதிமன்றம் தொடங்கியது முதல் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் கிடைக்கும் காட்சிகளை சில மாணவர்கள் சட்டவிரோதமாக யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ கான்பரன்சிங் நடைமுறைகளை வீடியோ அல்லது ஆடியோ பதிவு செய்வதோ, ஸ்கிரீன் ஷாட் எடுப்பதோ நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்று அப்போது நீதிபதிகள் எச்சரித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான அட்டவணையை பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: