பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே அறிவிக்கும்: பாஜ தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி அறிவிப்பு

திருச்சி: கூட்டணியில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்’ என்று பாஜ தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார். திருச்சி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாஜ தேசிய பொது செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று சாமி தரிசனம் செய்தார். இதைதொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், மவுனமடத்தில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.  

பின்னர் சி.டி.ரவி அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜவுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். தமிழக மக்கள் நலனில் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்து வருகிறார். தமிழக மக்களுக்கு உண்மையாக நாங்கள் நடந்து கொள்கிறோம். தேர்தலில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி. கூட்டணி பெரும்பான்மை அதிமுக என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய பாஜ எண்ணுவதால் தமிழக மக்களிடம் பாஜவுக்கு ஆதரவு இருக்கும். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அமித்ஷாவின் முன்னிலையில் கூட்டணி குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘கே.பி.முனுசாமியை பாஜ பொருட்படுத்தவில்லை’

அதிமுக பொதுக் குழுவில் இபிஎஸ், ஓ.பிஎஸ் முன்னிலையில், பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது பாஜவை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகள் நமக்கு ஒரு பொருட்டே இல்லை. தேசிய கட்சிகள் தமிழகத்தில் இன்னமும் வேரூன்றவில்லை என்று அவர் பாஜவை பெயர் குறிப்பிடாமல் சாடினார். இது பற்றி தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கூறுகையில், கே.பி.முனுசாமிக்கு விரைவில் பதிலடி தரப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கே.பி.முனுசாமியின் பேச்சு குறித்து சி.டி.ரவியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அதிமுக மூத்த தலைவரான கே.பி.முனுசாமியை பாஜ பொருட்படுத்தவில்லை என்ற தொனியில் பதிலளித்தார். அவரது கருத்தையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சி.டி.ரவி கூறிவிட்டார்.

Related Stories: