சேலம் ரயில்வே ஸ்டேஷன் 5வது பிளாட்பார்மில் மந்த கதியில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி

சேலம் : சேலம் ரயில்வே ஸ்டேஷன் 5வது பிளாட்பார்மில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது.

சேலம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தும் பணி, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்பகுதியில் புதிய டிக்கெட் கவுண்டர் மற்றும் அதிகாரிகளுக்கான அலுவலகங்கள், பயணிகளுக்கான ஓய்வு அறைகள் கட்டி திறக்கப்பட்டுள்ளது. மேலும், வண்ண கண்ணாடிகளால் அழகாக ரயில்வே ஸ்டேஷனை காட்சி அளிக்கிறது. இதேபோல், பிளாட்பார்ம்களை சீரமைக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த வகையில், 5வது பிளாட்பார்மில் நவீன முறையில் மேற்கூரை அமைத்தல், பயணிகளுக்கான இருக்கைகள், கழிவறை வசதிகளை ஏற்படுத்தும் பணி கடந்த 10 மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால், அந்த பணி இன்னும் தொடக்க நிலையில் தான் உள்ளது. மிகவும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது.

இந்த 5வது பிளாட்பார்மில் தொடங்கப்பட்ட எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அமைக்கும் பணியும் பாதியில் நிற்கிறது. எஸ்கலேட்டர் கருவிகள் அனைத்தும் வந்த நிலையில், அதில் பாதியை பொருத்தியுள்ளனர். மீதி பணியை விரைந்து முடிக்காமல், மந்த கதியில் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் இறுதிக்குள் எஸ்கலேட்டர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இன்னும் அந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இனியாவது மிக வேகமாக பிளாட்பார்ம் சீரமைப்பு மற்றும் எஸ்கலேட்டர், லிபட் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘5வது பிளாட்பார்ம் சீரமைப்பு பணி முழுமையாக முடிய, இன்னும் 6 மாதத்திற்கு மேல் ஆகும். ஆனால், எஸ்கலேட்டர், லிப்ட் அமைக்கும் பணியை விரைந்து முடித்து விடுவோம். அதனை விரைவில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Related Stories: