அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மீண்டும் முளைத்த நெல்மணிகள்-இளையான்குடியில் தொடர்மழையால் பரிதாபம்

இளையான்குடி : இளையான்குடி பகுதியில் தொடர்மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் அனைத்தும் மீண்டும் முளைத்துள்ளன.  உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நடப்பாண்டில் 17 ஆயிரத்து 566 ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. டிசம்பர் இறுதியில் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் தொடர்மழையால் அறுவடை செய்ய முடியவில்லை. மேலும் வயல்களில் அதிகளவு மழைநீர் தேங்கியது. நெற்கதிர்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. இதனால் விளைந்த நெல்மணிகள் அனைத்தும் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளன.

இவற்றை இயந்திரத்தால் அறுவடை செய்ய முடியாது. எனவே கதிர்களை கைகளால் அறுத்துக் கொண்டு வந்து, வயல்மேடுகளில் அடித்து பிரித்தெடுக்கின்றனர். இதில் முளைத்ததுபோக, சிறிதளவு நெல்மணிகளே கிடைக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பரத்தவயலை சேர்ந்த விவசாயி தனபால் கூறுகையில், ‘‘ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அனைத்தும் முளைத்து பயிராகிவிட்டது. அடுத்த விதைப்பிற்கு விதை இல்லை.  சாலைக்கிராமம், சூராணம், இளையான்குடி  ஆகிய வருவாய் பிர்காக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மட்டும் சுமார் 3  ஆயிரம் ஹெக்டேர் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: