போகிப் பண்டிகையன்று வேளாண் சட்டங்களை தீயிட்டு கொளுத்துவோம்: பெ.சண்முகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் 8வது சுற்று பேச்சுவார்த்தையிலும் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளான சென்னை, அசோக் நகர் நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெருமாள் (68), விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்று கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த 9ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.  

ஜனவரி 13 போகிப் பண்டிகை அன்று வீட்டிற்கு வேண்டாத பொருட்களை கொளுத்துவதை போல, நாட்டிற்கு வேண்டாத விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை தீயிட்டு கொளுத்துவோம் என்ற அறைகூவலை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்கள் வேளாண் விரோத சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு குடும்பமும் போகிப் பண்டிகை அன்று சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவை தர வேண்டும்.

Related Stories: