இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை உடனடியாக திருப்பி அனுப்புக...! சீனா கோரிக்கை

ஜம்மு: இந்தியாவின் எல்லைப்பகுதிக்குள் நேற்று நுழைந்த சீன ராணுவ வீரரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் எல்லைப் பிராந்தியமான லடாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இருநாட்டுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லை பிரச்சனை காரணமாக எல்லையில் இரு நாடுகளும் கூடுதல் படைகளை குவித்துள்ளன. இதனிடையே நேற்று முந்தினம் இரவு இந்திய எல்லையான பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவர் வழிதவறி இந்திய பகுதியில் நுழைந்தார். இதனை கண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் அந்த வீரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியப் பகுதிக்குள் வழிதவறி வந்த தங்கள் நாட்டு வீரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொட்ர்பாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள வலைதளப்பதிவில், புவியியல் வரைப்பட பிரச்சனை மற்றும் இருள் காரணமாக தங்கள் வீரர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இருநாட்டு ஒப்பந்தத்தின் படி அவரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த இந்திய ராணுவம் காணாமல் போன சீன வீரர் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரியிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர் சீனத் தரப்புக்குத் அந்த வீரர் திருப்பியனுப்பப் படுவார் என தெரிவித்துள்ளது.

Related Stories: