சுரண்டை அருகே குளம் உடைந்தது: மணல் மூடைகளை அடுக்கி விவசாயிகள் சீரமைப்பு

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையனேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரட்டைகுளம் உள்ளது. இந்த குளத்திற்கு அடவிநயினார் அணையில் இருந்து அனுமன்நதி வழியாக தண்ணீர் வருகிறது. இதன் மூலம் சுரண்டை, சிவகுருநாதபுரம், இரட்டைகுளம், குலையநேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்கிறது. நேற்றிரவும் மழை பெய்தது. இந்நிலையில் இரட்டைகுளத்தில் உபரிநீர் வெளியேறும் மதகு அருகில் திடீரென்று குளத்து கரை உடைந்து அதிலிருந்து மள,மளவென்று தண்ணீர் வெளியறி அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்தது. இதனால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இன்று காலை விவசாயிகள் திரண்டு வந்து கரை உடைந்த பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி சீரமைத்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்னர் தான் முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதிஒதுக்கப்பட்டு குளத்து கரை சீரமைக்கப்பட்டது. பெயரளவுக்கு மட்டுமே கரை சீரமைக்கப்பட்டிருந்ததால் இரண்டு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் குளத்தின் கரை உடைந்து விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டதாக  சுரண்டை நகர திமுக செயலாளர் ஜெயபாலன் கூறியுள்ளார்.

Related Stories: