வேதாரண்யம் பகுதியில் இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் ஆசிரியர்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் சிலம்பம் ஆசிரியர் கடந்த பத்தாண்டுகளாக இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தில் வசிப்பவர் கோபால் (65). இவர் புயல் அன்று பிறந்ததால் புயல் கோபால் என்று இவரை மக்கள் அழைக்கின்றனர். இவர் சிறு வயதில் அப்பகுதியில் உள்ள சிலம்பம் கற்கும் இடத்திற்கு சென்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்பு சிலம்ப கலையை கற்று மிகுந்த தேர்ச்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.சிலம்பாட்டம் என்பது தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். பேச்சுவழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.

சிலம்பம் கற்றுக்கொள்ளக் குறைந்தது ஆறு மாத காலம் தேவை. தமிழரின் பாரம்பரியமான இந்த கலையை அழிந்து விடாமல் பாதுகாக்க இப்பகுதி பள்ளி மாணவ மாணவிகள், இளம் பெண்கள், வாலிபர்களுக்கு, இலவசமாக கற்று தருகிறார்.தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் இவரிடம் சிலம்பம் கற்று வருகின்றனர். சிலம்பம் கற்றவர்கள் கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் நடைபெறும் சிலம்பாட்டத்தில் தவறாது கலந்து கொள்கின்றனர். இக்கலையை அழிந்து விடாமல் இவரது இலவச பயிற்சி வகுப்பு காப்பாற்றி வருகிறது என்றால் அது மிகையாகாது.

Related Stories: