பெரம்பலூர் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து டெய்லர் படுகாயம்: நள்ளிரவில் தீயணைப்பு படையினர் மீட்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தண்ணீரில்லாத கிணற்றில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த டெய்லரை நள்ளிரவில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது முகமதுபட்டினம் கிராமம். இவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே வசித்து வருபவர் ராஜூ மகன் திலீப்(40). டெய்லர். இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஊட்டியைச் சேர்ந்த பியூலா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். திலீப் கடந்த சில மாதங்களாக திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி பியூலா 2 மகன்களுடன் தற்போது ஊட்டியில் பெற்றோருடன் தங்கியுள்ளார்.மனைவியுடன் தகராறு, கடன் பிரச்னை என மன உளைச்சலால் திண்டாடி வந்த திலீப் சில தினங்களுக்கு முன்புதான் முகமது பட்டினம் கிராமத்திற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் வீட்டிலிருந்து வெளியே வந்த திலீப் அருகே இருளில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தூக்கக் கலக்கத்தில் அப்பகுதியிலிருந்த பயன்பாடில்லாத பாழுங்கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்ததால் இடுப்பு எலும்பு உடைந்து வலியால் துடித்துக் கதறினார். வீட்டிலிருந்து வெளியே சென்றவரைக் காணாத நிலையில் திலீப்பை உறவினர்கள் தேடிய போது, கிணற்றிலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் டார்ச் லைட் அடித்துப் பார்த்த போது கிணற்றில் குப்பைகளுக்கு நடுவே திலீப் சுருண்டு படுத்துக் கொண்டு உயிருக்குப் போராடி முனகிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

பின்னர் அங்கிருந்தவர்கள் கொடுத்தத் தகவலின் படி முகமதுபட்டினம் கிராமத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினர், பெரம்பலூர் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் ஒன்றிணைந்து கீழே விழுந்து அடிபட்டு வலியால் துடித்து கொண்டிருந்த நபரை உயிருடன் மேலேதூக்கி, மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுத்தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: