மாங்காடு, கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீருடன் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் பாதிப்பு: தொற்று நோய் பரவும் அபாயம்

குன்றத்தூர்: சென்னை சுற்று வட்டாரத்தில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், சென்னை புறநகர் பகுதியான மாங்காடு, கூடுவாஞ்சேரி பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்ததுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இங்கு தேங்கியுள்ள மழைநீரில் பூச்சி, பூரான், நத்தைகள், பாம்புகள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் படை எடுத்த வண்ணம் உள்ளன. இங்கு, அடிக்கடி மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மழைநீர் அதிகப் படியாக தெருக்களில் தேங்குவதால், நிலத்தடி நீர் சேறும் சகதியுமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனால், அப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். மேலும், அவ்வழியாக செல்லும் வாகனங்களின் இன்ஜினில் மழைநீர் புகுந்து, வண்டிகள் ஆங்காங்கே நின்று விடுகின்றன. இதையொட்டி, வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைநீருடன் அதிகளவில்  கழிவுநீர் கலந்துள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதில், ஓம்சக்தி நகரில் உள்ள ரேஷன் கடையினுள், மழைநீர் புகுந்தது. இதனால், அங்குள்ள அனைத்து பொருட்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகும் சூழல் உள்ளது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பை முழங்கால் அளவுக்கு மழைநீரில் கலந்த கழிவுநீரில் பொதுமக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். அதே போல், மாங்காடு காவல் நிலையம் செல்லும் சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பேரூராட்சி அதிகாரி தற்போது விடுமுறையில் இருப்பதால். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து மின் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள், தங்களது தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைகளுக்கு, முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பெரு வெள்ளத்தால் மாங்காடு பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனாலும்,மழை நீர் வடியாமல் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுவாஞ்சேரி:  கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஊரப்பாக்கம் ஊராட்சியில் அம்பேத்கர் நகர், எம்ஜி நகர், பிரியா நகர், செல்வராஜ் நகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், அருள் நகர், ஜெகதீஷ் நகர், காயரம்பேடு ஊராட்சியில் விஷ்ணுபிரியா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சுற்றி மழை வெள்ளம் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, கடைகளுக்கு செல்ல பல்வேறு சிரமம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளும், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பள்ளங்கள் தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பலர் வீடுகளை காலி செய்து, உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நந்திவரம், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, தைலாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளை பலர் ஆக்கிரமித்து, வீடுகள் கட்டியுள்ளதால் கால்வாய் வழியாக மழைநீர் செல்ல முடியவில்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் கால்வாய்களை சரிவர தூர் வராததால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போராட்டம் நடத்த முடிவு

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான காலி இடங்கள், இப்பகுதியில் அதிகமாக உள்ளது. அவ்வழியாக மழைநீர் செல்ல வழி இல்லை. இதனால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மழைநீரை அகற்றாவிட்டால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

விட்டுவிட்டு பெய்யும் மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயில் அடித்த நிலையில், மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ள நிலையில் தொடர் மழையால் வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள விஷார், கோவிந்தவாடி அகரம் பகுதிகளில் அறுவடைக்கு நெற்பயிர் தயாராக உள்ளது. இந்த திடீர் மழையால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோன்று, காஞ்சிபுரத்தில் இருந்து ஏனாத்தூர் செல்லும் சாலை கோனேரிக்குப்பம் பகுதியில் ரயில்வே கிராசிங் அருகே மழைநீர் தேங்கி சாலை சேதமடைந்துள்ளது. இதனால்

அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Related Stories: