அவசரகால பயன்பாட்டுக்கு 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் தமிழகத்தில் 190 இடங்களில் ஒத்திகை நடந்தது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேட்டி

சென்னை:  தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்து வரும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை ஆய்வு செய்தார். அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை எடுத்துக்கூறினர்.  பின்னர் பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி சேமிப்பு கிடங்கு, அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தையும் பார்வையிட்டார். இதையடுத்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

 தமிழகத்தில் அரசு, தனியார் துறை மற்றும் மத்திய சேமிப்பு மையங்களில் தென்மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளை பார்வையிட்டேன். 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் சில அரசு மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அடிக்கல் நாட்டியதை முதல்வருக்கு நினைவுபடுத்தினேன். தமிழகத்தின் மேல் பிரதமர் மோடிக்கு எப்போதுமே தனி பிரியம் உண்டு. சுகாதார பிரிவில் மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். தொடர்ந்து, 2வது கட்டமாக நாடு முழுவதும் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு பிறகு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் தேதி அறிவிக்கப்படும். 2 தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக சுகாதாரத் துறை பணிகயாளர்கள், முன் களப்பணியாளர்கள் அடுத்தபடியாக வயது முதிர்ந்தவர்கள், நாள்பட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

Related Stories: