விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைபடம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இந்நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் பார்ட்னர் லலித் குமார் உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ல் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. படத்தின் வெளியிடும் உரிமை, சாட்டிலைட் உரிமை அனைத்தும் எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமே உள்ளது.

படத்தை வெளியிடுவது தொடர்பாக ஒருவருக்கும் அனுமதி தராத நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை 400 இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். அவர்கள் படத்தை வெளியிட இணைப்புதர பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. பட நிறுவனம் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணின் ஆஜராகி, சட்ட விரோதமாக மாஸ்டர் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, மாஸ்டர் திரைப்படத்தை இணைய தளங்களிலும், கேபிள் டிவிகளிலும் வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: