சங்க இலக்கியங்கள் போற்றிய தலைநீர் நாடு தாங்க நம்ம ஒகேனக்கல்லு...! உழைப்பு மட்டுமே மக்களின் மூலதனம்

நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ்நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது இந்த ‘பிளாஷ்பேக்,’’  ‘குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி, அருவியாய் ஆர்ப்பரித்து தமிழ்மண்ணை தழுவிக் கொள்ளும் இடம் ஒகேனக்கல். தமிழகத்தின் தஞ்சை சீமையில் நஞ்சையும், புஞ்சையும் வளர்ந்து செழிப்பதற்கான நீர் வழித்தடங்கள் இங்கிருந்து தான் தொடங்குகிறது என்பது இதன் தனிச்சிறப்பு. தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம் தாலுகாவில் உள்ள ஒகேனக்கல், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

சங்க இலக்கியங்களில் அதியமான் நெடுமான்அஞ்சி ஆட்சி செய்த தகடூர் நாட்டில் தலைநீர்நாடு  என்று போற்றப்பட்ட பகுதியாக ஒகேனக்கல் இருந்துள்ளது. ‘உகுநீர்க்கல்’ என்பது இதன் பழைய பெயராகும். இந்த பெயரே, காலத்தின் சுழற்சியால் மருவி ஒகேனக்கல் என்று மாறி நிற்கிறது. 1940ம் ஆண்டு வாக்கில் நடத்தப்பட்ட  ‘சேமன்சண்டை’ என்னும் தெருக்கூத்துகளில் கோமாளி வேடமணிந்தவர், ‘கங்கையாடப் போகிறேன், குமரியாட போகிறேன்’ என்று ஆற்றையும், கடலையும் கூறுவார். அப்போது எதிரில் இருப்பவர், பக்கத்தில் இருக்கும் உகுநீர் கல்லுக்கு போகக் கூடாதா?  என்று நகையாடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதேபோல் ‘புகை நற்கல்’ என்ற தமிழ்ச்சொல், கன்னடர்களால் ஹோகேனக்கல் என்று அழைக்கப்பட்டு, அதுவே வழக்கத்தில் இருப்பதாகவும் பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

திப்புசுல்தான் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது இந்த பகுதி. அப்போது வரிவசூலிப்பவர்கள் அனைவரும் கன்னடர்களாக இருந்தனர். அவர்கள் வருவாய்த்துறை பதிவேடுகளில் புகைபோல் நீர்வரும் இந்த பகுதியை ஹோகேனக்கல் என்று அழைத்தனர். அதுவே தற்போது ஒகேனக்கல்லாக மாறி நிற்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கி.பி.2ம் நூற்றாண்டில் ஒகேனக்கல் வழியாக சீறிப்பாய்ந்து வாய்ந்த காவிரி மீது தான், கல்லணை கட்டினார் கரிகால் சோழன் என்பது பெருமைக்குரிய வரலாறு. அதற்கு பிறகு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், 1877ல் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்திலும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன்பிறகே மைசூரில் கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் ஸ்டான்லி அணையும் கட்டப்பட்டது. கர்நாடக அணைகளை நிரப்பி விட்டு, ஆர்ப்பரித்து வரும் காவிரித்தாய்,அகத்தியர் பாடியபடி தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியாய் பொங்கி பிரவாகம் எடுத்து நிற்கிறாள்.

இப்படி பழம்பெருமையும், வரலாற்று சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற ஒகேனக்கல், தற்போது பென்னாகரம் பேரூராட்சியில் உள்ளது. இந்த பேரூராட்சியானது 25க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், கோட்டூர்மலை, எரிமலை, அலகாடு மலை உள்ளிட்ட மலைகிராமங்களையும் உள்ளடக்கியது. ஒகேனக்கல் இடம் பெற்றுள்ள பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கந்தசாமிகவுண்டர், ஹேமலதாதேவி, காரிவேங்கடம், முத்துசாமி, மாணிக்கம், அப்புனுகவுண்டர், தீர்த்தராமன், ஆறுமுகம், நஞ்சப்பன், புருஷோத்தமன், ஜி.கே.மணி, பெரியண்ணன், இன்பசேகரன் உள்ளிட்டவர்களின் குரல், சட்டமன்றத்தில்  மக்களுக்காக ஒலித்துள்ளது.

அடர்ந்த மலைகள், ஆர்ப்பரிக்கும் அருவி, அசத்தும் ஆயில்குளியல், அருமையான படகுசவாரி, சுவையூட்டும் மீன்குழம்பு என்று என்று இங்கு வருவோரை, தனது அழகால் கிறங்கடிக்கிறது ஒகேனக்கல். நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும் அழகியல் பின்னணியாக நின்று மெருகூட்டியுள்ளது. ஆனால் இங்கு வாழும் மக்களுக்கு இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாத துயரமே தொடர்ந்து வருகிறது. உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டுள்ள ஆயிரமாயிரம் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் எதுவும் இல்லை. எனவே எழில்கொஞ்சும் ஒகேனக்கல்லில் கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். அதன் மூலம் ஒகேனக்கல் உலகப்புகழ் பெறுவதோடு, தர்மபுரி மாவட்டத்திற்கும் தனி அடையாளம் கிடைக்கும் என்பது மண்ணின் மைந்தர்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

Related Stories: