தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படுமா?: இன்று மாலையுடன் முடிகிறது கருத்துக் கேட்பு கூட்டம்

சென்னை: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது பற்றி 2-வது நாளாக பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் கடைசி நாளாக இன்று கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது. பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்று மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டிருந்தார். பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை இன்று மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் நடப்பாண்டில் பொதுத்தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம் அளித்து இருந்தார். அதன்படி முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைகளுக்குப் பின் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்படலாம் என கூறியிருந்தார்.

Related Stories: