அதிக வரி வருவாய் ஈட்டி தரும் மஜிது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தங்கவயல்: தங்கவயல் நகர சபையின் மஜிது வார்டில் இது வரை ஒரு ஐ மாஸ் மின் டவர் கூட அமைக்கப்படாத நிலையில் உள்ளது. தங்கவயல் நகரசபையின் எண் 23. மஜிது வார்டில் பவர்லால் காம்பவுண்ட் 1, 2,ரெட்டி பீல்டு, பன்னாலால் லே அவுட், முஸ்தி மஞ்சில், தொட்டி, உரிகம்பேட்டை கருவாட்டு லைன் ஆகியவை அடங்கி உள்ளன. இந்த வார்டில் வசிக்கும் மஞ்சு நாத் கூறும் போது, ‘‘தங்கவயல் நகரசபையின் அதிக வரி வருவாய் ஈட்டி தரும் வார்டாக மஜிது வார்டு இருந்த போதும், இதுவரை இந்த வார்டில் ஒரு ஐ மாஸ் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்படவில்லை.

கடந்த நான்கு மாதங்களாக தெரு விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து எரியாமல் இருந்தது. தற்போது நகரசபையின் தெரு விளக்கு பராமரிப்பு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டுள்ளதால், சில தினங்களுக்கு முன்புதான் வார்டில் உள்ள தெரு விளக்குகள் அனைத்தும் பழுதுநீக்கி மாற்றி இப்போது அனைத்து விளக்குகளும் எரிகிறது. சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்கப்பட்டும் அது திறக்கப்படாமல் உள்ளது. இந்த வார்டில் பவரிலால் பேட்டை அடுத்து தலித் மக்களின் கல்லறை தோட்டம் உள்ளது. இதை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தலித் மக்கள் இறந்தால் புதைக்க கூட இடமின்றி அவதிப்படுகிறோம் என்றனர்”.

தங்கவயல் சொர்ண குப்பம் பகுதியில் வசிக்கும் தலித் மக்களின் கல்லறை பவுர்லால் பேட்டையில் 60 குண்டா அளவு இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக வெறும் 4குண்டா அளவாக சுருங்கி உள்ளது. அதை மீட்டு சுற்று சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரி தலித் சங்கர்ஷா சமிதி அம்பேத்கார் வாதா தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இது குறித்து சங்க தலைவர் ஏ.பி.எல்.ரங்கநாத் கூறும் போது, ``ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்களின் கல்லறை தோட்டம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை மீட்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதிகாரிகள் சர்வே செய்து ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக தெரிவித்த போதும் ரியல் எஸ்டேட் நிறுவனம் அதை  ஏற்க மறுத்து கோர்ட்டுக்கு செல்வோம் என்று கூறுகின்றனர். கல்லறை தோட்டம் ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமின்றி அக்கம் பக்கத்தினர் குப்பை கூளங்களை கொட்டி குப்பை கிடங்காக மாற்றியுள்ளனர்’’ என்றார்.

நகர பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளையும் போல் மஜிது வார்டிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை பெய்தாலே களிமண் சாலைகளாக மாறி நடந்து செல்ல முடியாத அளவு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. தங்கவயல் நகரசபையின் மார்க்கெட் பகுதியில் அமைந்து, அதிக வரி வருவாய் தரும் மஜிது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே வார்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: