கோலார் மாவட்டத்தில் 6 தாலுகாவில் ஆசிரியர் பவன் அமைக்க முயற்சி: மாவட்ட ஆசிரியர் சங்க தலைவர் தகவல்

கோலார்: கோலார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா தலைநகரங்களில் ஆசிரியர் பவன் அமைக்க அரசிடம் வலியுறுத்துவதாக மாவட்ட ஆசிரியர் சங்க தலைவர் ரவிகுமார் தெரிவித்தார். கோலார் மாவட்ட ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிகுமார் உள்பட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, சீனிவாசபுரா தாலுகா, மரசனபள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்தது. பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ரவிகுமார் பேசும்போது, ``நீங்கள்  நடத்தும் பாராட்டு, கொடுக்கும் கவுரவம் நான் உள்பட நிர்வாகிகள் உங்களுக்காக சிறப்பான சேவை வழங்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.

ஆசிரியர்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து கலந்தாய்வு செய்வது உள்பட பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு தாலுகா தலைநகரிலும் ஆசிரியர் பவன் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா  தலைநகரங்களிலும் ஆசிரியர் பவன் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் ஆசிரியர், ஆசிரியைகளின் பிரச்னைகள் மற்றும் தேவைகளை தெரிந்து கொள்ள வசதியாக ஆசிரியர் நண்பர் நியமனம் செய்யப்படும். அவர்கள் நகரம் மற்றும்  கிராமபுறங்களில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களை சந்தித்து குறைகளை கேட்டு அதை அறிக்கையாக கொடுப்பார்கள். அதை பரிசீலனை செய்து வட்டார கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம்  பார்வைக்கு கொண்டு சென்று தீர்க்கப்படும். அவர்கள் மூலம் தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்தால் கல்வியமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்கப்படும் என்றார்’’.

Related Stories: