மாநிலத்தின் எல்லையோர பகுதிகள் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் புது அறிவிப்புகள் வெளியாகும்: அமைச்சர் ஜெகதீஷ்ஷெட்டர் தகவல்

ஹுப்பள்ளி: மாநிலத்தின் எல்லையோர மேம்பாட்டிற்காக பேராசிரியர் நஞ்சுண்டப்பா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 39 தாலுகாக்கள் வரும் 5 ஆண்டுகளில் தரம்  உயர்த்தும் வகையில் வரும் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார். இது குறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ``மாநிலத்தில் பெங்களூரு மாநகருக்கு அடுத்தப்படியாக தொழில் மாவட்டமாக ஹுப்பள்ளி-தார்வார் மாவட்டத்தை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். எனது முயற்சிக்கு மாநில முதல்வர் எடியூரப்பா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

கடந்தாண்டு ஹுப்பள்ளியில் நடத்திய சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற பல தொழிலதிபர்கள், தொழிற்சாலை அமைப்பதற்கான தொழில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர்கள் தொழிற்சாலை அமைக்க வசதியாக கர்நாடக மாநில தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில் நிலம் கையகப்படுத்தி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் மாநிலத்தின் எல்லையோர மேம்பாடு தொடர்பாக பேராசிரியர் நஞ்சுண்டப்பா கமிஷன் கொடுத்துள்ள அறிக்கையில் 39 தாலுகாக்கள் மிகவும் பின் தங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 20 தாலுகாக்களின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

மீதியுள்ள தாலுகாக்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பு வரும் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும்’’ என்றார்.

Related Stories: