ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் ஆயக்குடி கொய்யாவுக்கு போதிய விலை இல்லை

*பராமரிப்பு செலவு கூட கிடைக்காத பரிதாபம்

*பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டுகோள்

*புவிசார் குறியீடு வழங்கவும் வலியுறுத்தல்

*குரலற்றவர்களின் குரல்

பழநி : ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டும் ஆயக்குடி கொய்யா, மா போன்றவற்றுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும். இப்பகுதியில் பழக்கூழ் தொழிற்சாலை கொண்டு வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இங்கு ஆயக்குடி, சட்டப்பாறை மற்றும் வரதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழங்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன.

இந்த பழ வகைகள் இப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் ஆயக்குடி கொய்யா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சந்தையில் விற்பனைஇதற்காக ஆயக்குடி பேரூராட்சி அருகில் நீண்டகாலமாக சந்தை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் அதிகாலையில் சந்தை நடைபெறும். விவசாயிகளே நேரடியாக கொய்யாவை விற்பனைக்கு கொண்டு வந்து விடுவர். அங்கு சுமார் 20 கிலோ எடை கொண்ட கொய்யாப்பழங்கள் பெட்டிகளில் அடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆயக்குடி பகுதியில் லக்னோ, பனராஸ் மற்றும் சிவப்பு நிற கொய்யா வகைகள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. இவை தரத்தைப் பொறுத்து பெட்டி ரூ.600 துவங்கி ரூ.1300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கொய்யா விளைச்சலில் முதலிடம் கொய்யா மருத்துவ குணம் கொண்டது. இப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமுள்ளது. தவிர, கொய்யாவில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து, எரியம், மாவுச்சத்து, தாதுச்சத்து, கொழுப்பு இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன. பற்கள் மற்றும் எலும்புகளுக்கு இவை ஊட்டமளிக்கக் கூடியது. எனவே, இதனை பலரும் உண்ணுகின்றனர். உலகளவில் கொய்யா உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொய்யா உற்பத்தியில் ஆயக்குடியே முதலிடத்தில் உள்ளது. ஆனால், இத்தகைய பெருமைகளைக் கொண்ட ஆயக்குடி கொய்யாவுக்கு விவசாயிகள் நீண்டகாலமாக புவிசார் குறியீடு மற்றும் பழக்கூழ் தொழிற்சாலை கேட்டு ஏக்கத்தில் தவித்து வருகின்றனர்.

பழக்கூழ் தொழிற்சாலை இதுகுறித்து ஆயக்குடியைச் சேர்ந்த கொய்யா விவசாயி சுந்தரம் கூறியதாவது:

எங்கள் பகுதியில் அதிகளவு கொய்யா விளைவிக்கப்படுகிறது. ஆனால், சேமித்து வைக்க வழி இல்லாததால் உடனடியாக விற்பனை செய்ய வேண்டி உள்ளது.  இதனை சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகள், சிண்டிகேட் அமைத்து குறைந்த விலையில் கொய்யாவை வாங்கிச் சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். உரச்செலவு, பராமரிப்பு செலவு, பறிப்புக்கூலி, போக்குவரத்து செலவு போன்றவைகளை கணக்கிட்டால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு கிடைப்பது மிகச் சொற்பான லாபமே ஆகும். சில நேரங்களில் அதுவும் கிடைப்பதில்லை.

கொய்யா பழங்களை கூழாக்கி அதனை பதப்படுத்தி பழச்சாறாக்கும் தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். அதுபோல் தனிப்பெருமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆயக்குடி கொய்யாவிற்கு, பழநி பஞ்சாமிர்தத்திற்கு வழங்கியது போல் புவிசார் குறியீடு வழங்க வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘திமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை’ பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘‘ஆயக்குடியில் மா மற்றும் கொய்யாவிற்கு பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் பலமுறை பேசி உள்ளேன். ஆனால், விவசாயிகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. திமுக ஆட்சியில் நிச்சயமாக ஆயக்குடியில் பழச்சாறு தொழிற்சாலை அமைக்கப்படும். இதுபோல் ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்கவும் திமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

புவிசார் குறியீடு என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட புவி சார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப்பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் 1999ல் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பிற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.இதுவரை புவிசார் குறியீடுபெற்ற பொருட்கள் இதுவரை இந்தியாவில் சுமார் 200 பொருட்களுக்கு மேல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த 57 பொருட்கள் அடக்கம். தமிழகத்தில் தஞ்சாவூர் கலைத்தட்டு, காஞ்சிபுரம் பட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, பவானி ஜமுக்காளம், சேலம் வெண்பட்டு வேஷ்டி, பத்தமடை பாய், தஞ்சாவூர் கலைத்தட்டு, மதுரை மல்லிகைப்பூ, சிறுமலை மலைவாழை, ஈரோடு மஞ்சள், சுவாமிமலை வெண்கலச் சிலைவார்ப்பு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழநி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: