கல்லட்டி சரிவில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள்-சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி மலைச் சரிவுகளில் பூத்துள்ளன. சுற்றுலா பயணிகள் இதனை வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், மலைகளில் பூக்கக்கூடியவை. இந்த வகையான மலர்கள் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம், ஆண்டிற்கு ஒரு முறை, 3 ஆண்டுக்கு ஒரு முறை, 6, 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என பூக்கும் தன்மை கொண்டவை.

மேற்கு தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 32 வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. எனினும், அவ்வப்போது பூக்கும் குறிஞ்சி மலர்களையும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகேயுள்ள கல்லட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையோரங்களில், குறிப்பாக பைசன்வேலி மலைச்சரிவில் பல இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஸ்டோபிலாந்தஸ் கான்சான் குயினஸ் மலர்கள் அதிகளவு இங்கு பூத்துள்ளன.

இந்த மலர்கள் மித வெப்ப காடுகளில் பூக்கும் தன்மை கொண்டவை. இது தவிர ஸ்டோபிலாந்தஸ் போலியாசிஸ் என்ற தாவர இனத்தை சேர்ந்த மூன்று ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் இந்த மலைச்சரிவில் ஆங்காங்கே பூத்துள்ளன. கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது இந்த குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Related Stories: