பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் : கழக கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் நடவடிக்கை!!

பொள்ளாச்சி,:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாட்கள் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கும்பல் விவகாரம் தமிழகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மார்ச் 3ம் தேதி, மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்சியர் திருநாவுக்கரசு (26), அவரது நண்பர்கள் ஜோதிநகரை சேர்ந்த சபரிராஜன் (25), சூளேஸ்வரன்பட்டி பூங்காநகரை சேர்ந்த சதீஸ் (29), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (24) ஆகியோரை, கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆச்சிப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் (28), கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (ஏ), 354 (பி) உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பாலியல் வழக்கில் கைதானவர்கள், பல இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி, ஆனைமலை அருகே உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும், அதை வீடியோ எடுத்து மிரட்டியதால், இதுதொடர்பான முதற்கட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவிட்டதையடுத்து, அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மீது பாலியல் தொடர்பான விசாரணை நடத்தி, இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

இந்த வழக்கில் சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கின் திடீர் திருப்பமாக  நேற்று, பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை, சிபிஐ போலீசார் திடீரென அழைத்து சென்று ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர்.இவர்கள், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக, பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), வி.கே.வி. லே-அவுட்டை சேர்ந்த பாபு (27), ஆச்சிப்பட்டியை சேர்ந்த ஹெரான்பால் (29) ஆகியோரை, அவர்கள் இருக்கும் இடத்தை  சிபிஐ போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

15 நாட்கள் காவல்

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மைக்பாபு, அருளானந்தம், ஹெரான்பால் ஆகியோருக்கு கோவை அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பிறகு அவர்கள் மூவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான மூவர்களுக்கும் 15 நாட்கள் காவல் விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி உத்தரவிட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்

இதையடுத்து பொள்ளாச்சி வழக்கில் கைதான பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் அதிமுக கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர். மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Stories: