கொச்சி - மங்களூரு இடையிலான 450 கிமீ எரிவாயு திட்டம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: கொச்சியில் இருந்து மங்களூருக்கு அமைக்கப்பட்டுள்ள 450 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ‘ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு’ திட்டத்தின் கீழ், ரூ.3,000 கோடி செலவில் கேரளாவின் கொச்சிக்கும், கர்நாடகாவின் மங்களூருக்கும் இடையே 450 கி.மீ. தூரத்துக்கு இயற்கை எரிவாயுவை வினியோகிக்கும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். அதில், அவர் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நெடுஞ்சாலை, ரயில்வே, மெட்ரோ, காற்று, நீர், டிஜிட்டல் மற்றும் எரிவாயு இணைப்புகள் எனது தலைமையிலான பாஜ ஆட்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. எரிசக்தி திட்டங்களில் அரசு ஒருங்கிணைந்த அணுகுமுறையை கொண்டுள்ளது. நமது எரிசக்தி திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய திட்டங்களாகும். கடந்த 6 ஆண்டுகளில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்வது, கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்து, 32,000 கி.மீ. தூரமாக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டின் மொத்த எரிசக்தி பயன்பாட்டிற்கான தொகுப்பில் 58 சதவீதம் நிலக்கரி, 26 சதவீதம் பெட்ரோலியம், 6 சதவீதம் இயற்கை எரிவாயு, 2 சதவீதத்துக்கும் குறைவாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பெறப்படுகிறது.

இயற்கை எரிவாயு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதால், எரிபொருள் கொண்டு செல்வதற்கான வாகன போக்குவரத்து வரும் 2030ல் 15 சதவீதம் வரை குறையும். அதே நேரம், பெட்ரோலுக்கு மாற்றாக, கரும்பு உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களில் இருந்து 20 சதவீதம் எத்தனால் தயாரிக்கப்பட இருப்பதால் எண்ணெய் இறக்குமதி, கார்பன் வெளியேற்றம் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: