சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை..! காலை 10 மணி வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 மணிநேரத்திற்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட  பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: