டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 8-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி மற்றும் அதன் எல்லையில் பல்வேறு விவசாய அமைப்பினர் கடுமையான குளிர், மழைக்கு மத்தியில் இன்று 39வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்த நிலையில், நேற்று மட்டும் மேலும் 3 விவசாயிகள் இறந்தனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசு மற்றும் விவசாய அமைப்புகள் இடையே இன்று மீண்டும் 7ம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டங்களை திரும்ப பெறவில்லை எனில் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று விவசாயிகள் மவுனமாயினர்.

பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர்கள் தோமரும், பியூஷ் கோயிலும் தனியாக ஆலோசனை நடத்தினர். வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக வாக்குறுதி அளிக்க அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் பேசிய தோமர் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மத்திய அரசு கூறுவதை ஏற்க விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என கூறினார். இதனிடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: