பாஜகவுக்கு எப்படி தடுப்பூசி சொந்தமாகும்?.. அகிலேஷ் எதிர்ப்பு; உமர் அப்துல்லா வரவேற்பு

லக்னோ: எங்களால் பாஜகவின் தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொள்ள முடியாது என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். ஆனால், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தான் தடுப்பூசியை போட்டுக் கொள்வதாக தெரிவித்தார். பல நாடுகளில் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் தடுப்பூசி விநியோகிப்பதற்கான சோதனைப் பயிற்சி தொடங்கி உள்ளது. டெல்லியில் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னோட்டத்தை நேற்று ஆய்வுசெய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், தடுப்பூசி குறித்து சில கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போது தயாராகிவரும் கொரோனா தடுப்பூசி பாஜகவின் தடுப்பூசியாகும்.  பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது?. வருகிற 2022ம் ஆண்டு பேரவை தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் எங்கள் அரசு அமையும். அப்போது மக்கள் அனைவரும் இலவச தடுப்பூசியைப் பெறுவார்கள். எங்களால் பாஜகவின் தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொள்ள முடியாது’ என்றார். அகிலேஷ் யாதவின் இந்த கருத்து தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘தடுப்பூசி குறித்து அகிலேஷ் எழுப்பிய கேள்விகள் நாட்டின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி குறித்து தவறாக பேசியதற்காக அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டுவிட்டரில், ‘மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் என்னுடைய முறை வரும்போது சந்தோ‌ஷமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வேன்.

எந்த ஒரு தடுப்பூசியும் எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. அவை மனித குலத்துக்கு சொந்தமானவை. கொரோனாவால் பாதிக்கக்கூடிய மக்களுக்கு எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போடுகிறோமோ அவ்வளவு நல்லது. நாட்டில் வைரஸ் மிகுந்த சீர்குலைவை ஏற்படுத்திவிட்டது. ஒரு தடுப்பூசியால் இயல்புநிலையை ஏற்படுத்த முடியும் என்றால், அதை போட்டுக்கொள்ள என்னை தாராளமாக அழையுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: