அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு அறை: சுகாதாரத்துறை செயலாளர் திறந்து வைத்தார்

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு அறையை சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனாவால் பாதித்தவர்கள் சிகிச்சைக்குப் பின், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த அறை பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு சித்தா தேசிய தினத்தில், கோவிட்-19 பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பல வெளியாக வாய்ப்பு உள்ளது.  மத்திய அரசு சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்காக 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், நோய்கள் குறித்து ஆய்வு செய்வது எளிதாக இருக்கும். பிரபல நட்சத்திர ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த ஓட்டல் மூடப்பட்டுள்ளது. ஜனவரி 10ம் தேதி வரை அங்கு எந்தவித நிகழ்ச்சியும் நடைபெறாது என ஓட்டல் நிர்வாகம்  உறுதியளித்துள்ளது.

அதனையும் மீறி, அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால், இந்திய பொது சுகாதார சட்டப்படி என்ன அபராதம் விதிக்கப்படும் என்பதை அரசு தெரிவிக்கும். சிகப்பு எறும்பு சட்னி மற்றும்  சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான மருத்துவத்தை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மருத்துவத்துறையில், கொரோனா நோய்க்கான ஆராய்ச்சிகள் முற்றிலுமாக நடைபெற்று அதற்கான மருந்துகள் விநியோகிக்கப்படும். அதனை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்டும் பொய்யான மருந்துகளை சாப்பிடுவது அல்லது மருத்துவத்தை பயன்படுத்துவது தவறு. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வழங்கப்படுகின்ற மருந்துகளை உட்கொள்வது நல்லது. எலும்பு முறிவுக்கு புத்தூர் கட்டு போடுவதால் எலும்பு ஒன்றாக சேர்ந்து விடும் என்ற தவறான கோணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது அல்ல.

அதற்கு தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் சரியானதாக இருக்கும். சித்த மருத்துவம் டெங்குவில் மிகப்பெரிய பங்கு வகித்தது. 37 நாடுகளில் நிலவேம்பு கசாயம்  தயாரிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர்.  நிதி ஒதுக்கீடு, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான கட்டிடங்கள் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. 2021-22ம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை குறித்த நேரத்தில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், இந்திய மருத்துவத்துறை இயக்குனர் தினேஷ், இணை இயக்குனர் பார்த்திபன், சித்த மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் கனகவள்ளி மற்றும் சித்தா டாக்டர் சதீஷ் பங்கேற்றனர்.

Related Stories: