நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சர் வர்தன் அறிவிப்பு

புதுடெல்லி: ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்,’’ என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. இதை ஊசியை செலுத்துவது தொடர்பான ஒத்திகை நாடு முழுவதும் நேற்று நடந்தது. டெல்லியில் ஜிடிபி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு: நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் தயங்குவார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இத்தகைய தயக்கத்தைத் தாண்டியே போலியோ தடுப்பு மருந்து இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பதில் அனைத்து விதிமுறைகளும் கடுமையாகப் பின்பற்றப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசியின் தரத்தில் எந்த சமரசமும் இல்லை. எனவே, தடுப்பூசி பலன் தராது, பக்கவிளைவுகள் ஏற்படும் போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மிகுந்த முன்னேற்பாடுகளுடனும், எச்சரிக்கையுடனுமே தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. பயிற்சி அளிக்கப்பட்ட 96 ஆயிரம் பேர், இந்த தடுப்பூசி வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருந்தை சரியான வெப்பநிலையில் பாதுகாத்தல், ஊசி வழங்கிய பிறகு ஏற்படும் விளைவுகளை கண்காணித்தல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து பயணிகளுக்கு கட்டண பரிசோதனை

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், அந்நாட்டுக்கான விமான சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 8ம் தேதி முதல் இது மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் இருந்து வரும் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் வரும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் கட்டணம் பெற்று கொண்டு பரிசோதனை நடத்தப்படும்  என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும், அந்நாட்டில் இருந்து கிளம்புவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழழை சமர்ப்பிப்பதும், இந்தியா வந்த பிறகு வீட்டு தனிமையில் 14 இருப்பதும் கட்டாயம் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மாற்றமடைந்த கொரோனா இங்கிலாந்தில் பரவியுள்ளதால் கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இங்கிலாந்து விமானங்கள் தடை செய்யப்பட்டன. இந்த தடை 7ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2 கோடியை தாண்டியது அமெரிக்கா

* உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

* நேற்று வரை இங்கு 3,47,973 பேர் பலியாகி உள்ளனர். பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

இந்தியாவில் 1 கோடி பேர் ஓகே

* அமெரிக்காவைத் தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்ட 2வது நாடாக இந்தியா உள்ளது.

* நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1 கோடியே 3 லட்சத்து 5,788 பேர் பாதித்துள்ளனர்.

* 8 மொத்தம் 1 லட்சத்து 49,218 பேர் இறந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது.

Related Stories: