மார்பக புற்றுநோய் பிரிவில் சிறந்த சேவை ஐதராபாத் டாக்டருக்கு இங்கிலாந்து உயர் விருது

ஐதராபாத்: மார்பக புற்றுநோய் சிகிச்சையில் சிறந்த சேவை புரிந்ததற்காக ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ரகுராமிற்கு இங்கிலாந்து அரச பரம்பரையின் மிக உயரிய `ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கப்பட உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்தவரும் கிம்ஸ் இயக்குனருமான மருத்துவர் ரகுராம் பில்லாரிசட்டி, உஷா லட்சுமி மார்பக புற்றுநோய் என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் செயல் தலைவராகவும் இருக்கிறார். இந்த அறக்கட்டளையின் மூலம், அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான நட்புறவு, இந்தியாவில் அறுவை சிகிச்சை கல்வி அளித்தல், மார்பக புற்றநோய் தொடர்பான அவரது தன்னிகரற்ற சேவைக்காக, இங்கிலாந்து அரச பரம்பரையின் மிக உயரிய `ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கப்பட உள்ளதாக `லண்டன் அரசிதழ்’ என்ற அரண்மனையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், ரகுராம் இங்கிலாந்து அரசியின் 2வது மிக உயரிய விருதினை பெறும் இளம் வயது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ``மரியாதைக்குரிய இங்கிலாந்து ராணியின் இந்த விருதிற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கடந்த பல ஆண்டுகளாக, இங்கிலாந்தின் செயல்முறைகளை எனது தாய்நாட்டில் பிரதிபலிக்க கடினமாக உழைத்துள்ளேன். இந்தியா-இங்கிலாந்து இடையே நட்பு பாலமாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார்.

Related Stories: