பாரதிதாசன் பல்கலையில் இடஒதுக்கீடு முறை மாற்றம் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: திருச்சி பாரதிதாசன் பல்கலையில் 28 துறைகளில் காலியாக உள்ள 54 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 2019 ஜூலை 8ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக அரசு பல்கலை.களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட்டு, அதற்குள் 69% இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆள் தேர்வு அறிவிக்கையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஓர் அலகாக கருதப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தான் இட ஒதுக்கீட்டு முறையை மாற்றுவதற்கு ஆணை பிறப்பித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருச்சி பாலமுருகன் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, ‘‘உயர்கல்வித்துறை செயலர் தமது மனதை செலுத்தாமல், தொழில்முறை அணுகுமுறையைக் கடைபிடிக்காமல், மத்திய அரசு இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளார். எனவே, அவர் உயர்கல்வித்துறை செயலாளராக தொடருவதற்கு தகுதியானவர் தானா? என்பதை உரிய அதிகாரம் கொண்ட அதிகாரி தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். எனவே, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு சமூகநீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இஆப அதிகாரி அபூர்வாவை உயர்கல்வித்துறை செயலாளர் பதவியிலிருந்து அரசு நீக்க வேண்டும். சமூகநீதிக்கு எதிரான அந்த அதிகாரியை தமிழ்நாட்டில் எங்கும் பணியமர்த்தாமல் மத்தியப் பணிக்கு அனுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்போது, ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதும் நடைமுறையே தொடரும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: