தடையை மீறி குடியரசு தினத்தன்று டெல்லியில் நுழைவோம்...! உறுதியான முடிவை அறிவிக்கவும்: விவசாய சங்கங்கள் எச்சரிக்கை

டெல்லி: தடையை மீறி குடியரசு தினத்தன்று டெல்லியில் நுழைவோம் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 6 முதல் 20 ம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது குறித்து உறுதியான முடிவை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தில் டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறைக்கு பாதகமாக அமைந்திருப்பதாக கூறும் விவசாயிகள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர். மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் 2 கோரிக்கைகளை மட்டும் மத்திய அரசு ஏற்றுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசுடன் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற 6-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகைகள் ஜனவரி 23-ஆம் தேதி முற்றுகையிடப்படும் என்று கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 23-ஆம் தேதி நடத்தப்படும். மேலும் குடியரசு நாளான ஜனவரி 26-ஆம் தேதி தலைநகரான டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும். 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது குறித்து உறுதியான முடிவை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: