ஜனவரி 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை..! வாரத்திற்கு தலா 15 விமானங்கள் மட்டுமே இயக்கம்: விமான போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: இந்தியா - இங்கிலாந்து இடையே ஜனவரி 8-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு விமான நிறுவனமும் வாரத்திற்கு தலா 15 விமானங்களை இயக்கி கொள்ளலாம். கட்டுப்பாடுகளுடன் வரும் 23-ம் தேதி வரை விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட  பல நாடுகள் தற்காலிகமாக தடை செய்துள்ளன. இந்தியாவில் டிசம்பர் 31ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டன் நாட்டுடனான விமான போக்குவரத்து தடை, ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையே ஜனவரி 8-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு விமான நிறுவனமும் வாரத்திற்கு தலா 15 விமானங்களை இயக்கி கொள்ளலாம். கட்டுப்பாடுகளுடன் வரும் 23-ம் தேதி வரை விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 29 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: