ஜனவரி 14ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் பதவிக் காலம் நீட்டிப்பு: 2022, ஜனவரி 14 வரை நீடிப்பார்

புதுடெல்லி: அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள இஸ்ரோ தலைவர் கே.சிவனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராகவும், விண்வெளி துறையின் செயலாளராகவும் தற்போது, தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் இருந்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அன்றைய இஸ்ரோ தலைவர் கிரண் குமாரிடம் இருந்து ஜனவரி 14ம் தேதி இப்பொறுப்பை சிவன் ஏற்றுக் கொண்டார். விண்வெளியில் பல்வேறு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியது, சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது போன்ற சாதனைகளை இவர் செய்துள்ளார்.

 இவருடைய பதவிக் காலம் அடுத்த மாதம் 14ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், இவருடைய பதவிக் காலத்தை 2022ம் ஆண்டு, ஜனவரி 14ம் தேதி வரையில் மத்திய அரசு நேற்று நீட்டித்து உத்தரவிட்டது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம், இஸ்ரோ தலைவராகவும், விண்வெளித் துறைக்கான செயலாளராகவும் அடுத்த ஓராண்டுக்கு சிவன் நீடிப்பார். அதேபோல், இஸ்ரோவை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகளாக சோம்நாத் (விஎஸ்எஸ்சி இயககுனர்), யுஆர்எஸ்ஏசி இயக்குனர் குன்ஹி கிருஷ்ணன் ஆகியோரின் பதவிக் காலமும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: