ஜேடியு 17 எம்எல்ஏக்கள் விவகாரம்: ஷியாம் ராஜக் கூறியது முற்றிலும் ஆதாரமற்றவை... பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம்.!!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு)பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இத்தேர்தலில் பாஜ 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வென்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி, 110 தொகுதிகளில் வென்று எதிர்கட்சியாக உள்ளது. குறைவான தொகுதியில் வென்றாலும் ஜேடியு தலைவர் நிதிஷ்குமாரே மீண்டும் முதல்வர் என பாஜ அறிவித்து, அதன்படி அவர் பதவியேற்றார். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பாஜவுக்கு தாவினர். இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்தது.

தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளத்தின் நீண்ட கால தலைவர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் கடந்த 27-ம் தேதி விலகினார். அப்போது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், ‘‘தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, நான் முதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று பாஜவிடம் தெரிவித்தேன். பாஜவில் இருந்து வேண்டுமானால் முதல்வரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று பதவியேற்க மறுத்தேன். ஆனால், பாஜ தான் என்னை கட்டாயப்படுத்தி முதல்வராக பொறுப்பேற்க செய்தது. எனக்கு முதல்வர் பதவியில் நீடிக்க விருப்பமே இல்லை’’ என்றார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டிளித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஷியாம் ராஜக், ஜனதா தளத்தின் 17 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் எங்கள் கட்சியுடன் சேர தயாராக உள்ளனர். விலகல் எதிர்ப்புச் சட்டத்தை மீற, நாங்கள் விரும்பவில்லை. அவர்களின் குழு மிக விரைவில் 28 ஆக உயரும். 28 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழுவாக வரும்போதுதான் எங்கள் கட்சிக்கு வரவேற்போம் என்று தெரிவித்தார்.

ஷியாம் ராஜக் பேட்டி பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் ஷியாம் ராஜக் கூறியது முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.

Related Stories: