பட்டிவீரன்பட்டி அருகே அடிப்படை வசதியில்லாத மருதாநதி அணை

* புதர்மண்டிக் கிடக்குது பூங்கா; கழிப்பறை இல்லை

* சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் அவதி

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையத்தில் 72 அடி உயர மருதாநதி அணை உள்ளது. அணையில் தற்போது 62 அடி வரை தண்ணீர் உள்ளது. பாசனத்திற்காக அணையிலிருந்து 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு தாண்டிக்குடி மலைப்பகுதி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

சுற்றிலும் மலைகள் சூழ்ந்து ரம்மியமாக அணை காட்சியளிக்கும். இதனை காண்பதற்காக வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து அணையின் மதகு பகுதிகளில் குளித்து மகிழ்கின்றனர். அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘இந்த பகுதியில் பொழுது போக்கவும், சுற்றிபார்ப்பதற்கும் மருதாநதி அணை மட்டுமே உள்ளது.

பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த அணையில் உள்ள பூங்கா புதர்மண்டி பராமரிப்பின்றி கிடக்கிறது. கழிவறை வசதிகள் கிடையாது. இந்த அணையின் பூங்கா பகுதிகளை சீரமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: