வங்கக் கடலில் ஏற்படும் காற்று சுழற்சியால் கடலோர மாவட்டங்களில் மழை

சென்னை: வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியிில் பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் 3 முதல் 4 கிமீ உயரத்தில் வானில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றும் நாளையும், கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுவை, பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பொங்கல் பண்டிகை வரையில்கூட மழை நீடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 கிமீ வேகம் முதல் 50 கிமீ வேகம் வரை பலத்த காற்று வீசும்.

Related Stories: