சஞ்சய் ராவத்தின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!: அரசியலுக்காக வீட்டிலுள்ள பெண்களை குறிவைப்பதா?..சஞ்சய் சாடல்

மும்பை: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசியலுக்காக வீடுகளில் உள்ள பெண்களை குறிவைப்பது கோழைத்தனமான செயல் என சஞ்சய் ராவத் சாடியுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஆன உறவு சிதைந்தால் சோவியத் யூனியன் போல இந்தியாவும் சிதறும் என சிவசேனா எச்சரித்த நிலையில், சம்மன் அனுப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய், கடந்த ஓராண்டில் சரத் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வீட்டில் உள்ள பெண்களை குறிவைப்பது கோழைத்தனமான நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் நசீம்கான், இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை என தெரிவித்துள்ளார். அச்சத்தை உருவாக்கும் நோக்கில் செய்யப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

பாரதிய ஜனதாவை விமர்சிப்போருக்கு எதிரான ஆயுதமாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சருமான அனில் டெஷ்முச் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநில அரசியலில் இதுபோல் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாரதிய ஜனதா பிரதேச அலுவலகம் என எழுதப்பட்ட பேனரை சிவசேனா கட்சியினர் கட்டினர்.

Related Stories: