விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பதற்கான பெரிய படி: 100-வது விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை.!!!

டெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை செல்லும், 100-வது விவசாயிகள் ரயிலை டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் கோடி கணக்கான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கொரோனா சவால் இருந்தபோதிலும், கிசான் ரெயில் நெட்வொர்க் கடந்த நான்கு மாதங்களில் விரிவடைந்து இப்போது  அதன் 100-வது ரெயிலைப் பெற்றுள்ளது.

கிசான் ரயில் விவசாயிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய படியாகும். கிசான் ரயில் ஒரு நகரும் குளிர் சேமிப்பு வசதி போன்றது. பழங்கள், காய்கறிகள், பால், மீன் போன்ற அழிந்துபடக்கூடிய  பொருட்களை சரியான நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும் என்றார்.

கிசான் ரயில் வேளாண் தொடர்பான பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும். நாட்டின் குளிர்ப்பதன விநியோகச் சங்கிலியின் வலிமையை இது அதிகரிக்கும் என்றார். சிறிய அளவிலான வேளாண் பொருள்களும் முறையான  வகையில், குறைந்த செலவில் பெரிய சந்தைகளை சென்றடையும் வகையில், கிசான் ரயில் வாயிலாக செய்யப்படும் சரக்குப் போக்குவரத்துக்கு குறைந்தபட்ச அளவு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை

விவசாயிகள் தற்போது தங்களது பொருள்களை இதர மாநிலங்களிலும் விற்கலாம் என்றும், விவசாயிகள் ரயிலும், வேளாண் விமானங்களும் இதில் பெரும் பங்காற்றுகின்றன என்றும் பிரதமர் கூறினார். பிரதமரின் கிருஷி சம்பதா திட்டத்தின்  கீழ் மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள், குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பு, வேளாண் பதப்படுத்துதல் குழுமம் ஆகியவற்றின் கீழ் சுமார் 6500 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறு உணவு  பதப்படுத்துதல் தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் தொழில், வேளாண் உள்கட்டமைப்பில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்ற கூட்டுறவு குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சமீபத்திய சீர்திருத்தங்கள் வேளாண் தொழிலின்  விரிவாக்கத்திற்கு வழி வகுத்து, இக்குழுக்களை மிகப்பெரிய பயனாளிகளாக ஆக்கும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றமு உயர்  அதிகாரிகளும் பங்கேற்றனர். 

Related Stories: