சனிப்பெயர்ச்சி, தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுக்கு முழுவதும் திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கடந்த 8 மாதங்களுக்கு மேல் கொரோனா தொற்று காரணமாக ஆவணி மூலத்திருநாள், கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்கவும், கடலில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கடலில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தினமும் அதிகமாக பக்தர்கள் கோயிலுக்கு வருவதை காண முடிகிறது. மேலும் பாதயாத்திரை பக்தர்களும் தினசரி வருகின்றனர்.

இதனால் மாதந்தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்படும் உண்டியல் காணிக்கை வசூல் கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் 25ம்தேதி கிறிஸ்துமஸ், சனி, ஞாயிறு விடுமுறை 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை மற்றும் சனிப்பெயர்ச்சி என்பதால் அதிகாலையிலேயே நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்தனர். கடற்கரையில் புனித நீராடிய பின்னர் பக்தர்கள் சிறப்பு மற்றும் தர்ம தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மொட்டை போடும் இடத்திலும் கூட்டம் காணப்பட்டது.

தரிசன நேரம் அதிகரிக்கப்படுமா?

மார்கழி மாதத்தையொட்டி திருச்செந்தூர் கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கிறது. எனவே சுவாமி தரிசன நேரத்தை காலை 5 முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. புத்தாண்டு, தைத்திருநாளில் அதிகளவில் பக்தர்கள் வருவர் என்பதால் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பல்லாங்குழியான சாலை

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருச்செந்தூர் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வழியில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்தும், தூத்துக்குடியிலிருந்தும் வரும் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. கோயில் ரதவீதி ரோடுகளும் மேடும், பள்ளமுமாக உள்ளன. போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: