ஒரு தலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் காதலித்த பெண்ணின் தோழியை ரயிலில் கடத்திய இன்ஜினியரிங் மாணவன் கைது

* அரசியல்வாதி மகன் என தகவல்

* வாட்ஸ்அப் மூலம் ஆர்பிஎப் போலீசிடம் சிக்கினார்

சென்னை: ஒரு தலை காதலை ஏற்க மறுத்ததால் காதலித்த பெண்ணின் தோழி மற்றும் அவரது தங்கையை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு கடத்திய இன்ஜினியரிங் மாணவனை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர் அரசியல்வாதி ஒருவரின் மகன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது 9 வயது தங்கையுடன் ேநற்று முன்தினம் கடைக்கு சென்றார். வெகு நேரம் ஆகியும் 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமிகளின் தந்தை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் இரண்டு சிறுமிகளையும் வாலிபர் ஒருவர் கோட்டூர்புரம் பறக்கு ரயில் நிலையத்திற்குள் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனே போலீசார் சிறுமிகளின் புகைப்படம் மற்றும் அவர் அணிந்து இருந்த துணிகள் குறித்து அனைத்து ரயில்வே போலீசாருக்கும் கோட்டூர்புரம் போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்படி ரயில்வே போலீசாரும் புகைப்படங்களுடன் சிறுமிகளை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள ஏசி பெட்டியில், வாலிபர் ஒருவர் 2 சிறுமிகளுடன் ஏறினார். அதில் 9 வயது சிறுமி மட்டும் அழுது கொண்டிருந்தார்.

இதை பார்த்த ரயில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் எஸ்ஐ சரோஜ்குமார் என்பவர், சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமிகள் இருந்த பெட்டியிலேயே அவரும் ஏறினார். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை வாஸ்ட் அப் குழுவில் இரண்டு சிறுமிகள் மாயமானதாக புகைப்படத்துடன் பகிரப்பட்டது. இதை பார்த்த எஸ்ஐ சரோஜ்குமார் ஏசி பெட்டியில் செல்லும் சிறுமிகள் தானா என்று நேரில் பார்த்து உறுதி செய்துள்ளார். பிறகு ரயில் விழுப்புரம் வந்தடைந்ததும், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ 2 சிறுமிகள் மற்றும் உடன் வந்த வாலிபரை ரயிலில் இருந்து இறக்கி விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கோட்டூர்புரம் போலீசார் வரும் வரை 2 சிறுமிகளையும் ரயில்வே போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வைத்திருந்தனர். 2 சிறுமிகளுடன் வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அரசியல் பிரமுகர் மகன் ராஜேஷ்(19) என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருவது தெரியவந்தது. ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் 13 வயது பள்ளி மாணவியின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோட்டூர்புரம் என்பதால் ராஜேஷ் பள்ளி மாணவியை தினமும் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது பள்ளி மாணவியின் உடன் படிக்கும் சீனியர் மாணவி ஒருவர் அறிமுகமானார். அவரது அழகில் மயங்கிய ராஜேஷ், அந்த மாணவியை ஒருதலையாக காதலிக்க தொடங்கி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 13 வயது மாணவியின் நெருங்கிய தோழி என்பதால் அவர் மூலம் தனது காதலை ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது காதலை அந்த மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த ராஜேஷ் எப்படியாவது தனது காதலை ஏற்றுக்கொள்ளும் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அந்த திட்டத்திற்கு 13 வயது சிறுமியும் உதவி செய்வதாக ராஜேஷிடம் உறுதியளித்துள்ளார். ஆனால் இன்ஜினியரிங் மாணவன் ராஜேஷ் 13 வயது சிறுமிக்கு தெரியாமல் அவரை கடத்தி அதன் மூலம் தனது காதலியை மிரட்டி காதலிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி ேநற்று முன்தினம் இரவு ராஜேஷ் 13 வயது சிறுமியை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி சிறுமி மற்றும் அவரது சித்தி மகளான 9 வயது சிறுமியுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது ராஜேஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தது தெரியவந்தது. ஆனால் உடன் வந்த 9 வயது சிறுமி அழுது கொண்டு இருந்ததால் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐயிடம் சிக்கி கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் இரவோடு இரவாக விழுப்புரம் வந்து 2 சிறுமிகள் மற்றும் ரயிலில் கடத்திய இன்ஜினியரிங் மாணவனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் இன்ஜினியரிங் மாணவன் தனது பெயர் ராஜேஷ் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அவரது உண்மையான ெபயர் ரமேஷ் என்றும் அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன் தான் என்று தெரியவந்தது. பின்னர் ஆசை வார்த்தை கூறி 2 சிறுமிகளை கடத்தியதாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். 2 சிறுமிகளையும் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமிகள் மாயமானது குறித்து புகார் அளிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் சிறுமிகள் மீட்கப்பட்டதால் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் போலீசாரை வெகுவாக பாராட்டினார்.

Related Stories: