மயிலாடுதுறை இன்று உதயம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகுகிறது. சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன. 2019ல் புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவானது. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. மார்ச் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி புதிய மாவட்டத்தை உருவாக்க ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது. ஜூலையில் சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலிதா, போலீஸ் எஸ்.பியாக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தப்படி காணொலி காட்சி வாயிலாக இன்று காலை 9:30 மணிக்கு புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அப்போது புதிய மாவட்டத்துக்கான பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் முதல்வர் எடப்பாடி வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: