தென்சென்னை மாவட்டத்தில் குவியும் நிலமோசடி புகார்களை விசாரிக்க மேலும் 3 மாவட்ட பதிவாளர்கள் நியமனம்: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க ஐஜி உத்தரவு

சென்னை: தென்சென்னை மாவட்டத்தில் குவியும் நிலமோசடி புகார் தொடர்பாக விசாரணை நடத்த மேலும் 3 மாவட்ட பதிவாளர்கள் நியமனம் செய்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விசாரணையை, 3 மாதங்களில் முடிக்கவும் ஐஜி அறிவுரை வழங்கியுள்ளார். தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு கீழ் சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, ஆலந்தூர். பம்மல், தாம்பரம் உள்ளிட்ட பல சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் போலி ஆவணம் தயார் செய்து பத்திரம் பதிவு செய்வதாக கூறப்படுகிறது.  இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் வௌியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தென் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நில மோசடி புகார் மனுக்கள் அம்மாவட்டத்தை பொறுத்து மிக அதிகப்படியாக உள்ளது. அதனால், 2 மாதகாலத்திற்குள் விசாரணையை முடிக்க இயலாமல் பல புகார் மனுக்கள் தேக்க நிலையில் உள்ளது.  எனவே, உதவி பதிவுத்துறை தலைவர் கோரிக்கையை ஏற்று பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு மாநிலத்தில் குறைந்த அளவு நில மோசடி புகார் மனுக்கள் பெறப்படும் ஊட்டி, செய்யார், விழுப்புரம் மாவட்ட பதிவாளர்கள் தற்காலிகமாக அதாவது 3 மாதங்கள் (ஜனவரி, பிப்ரவரி, மார்ச்) மட்டும் தென்சென்னை மாவட்ட நில மோசடி புகார் மனுக்களை விசாரித்து பதிவு சட்டப்பிரிவு 68 (2)ன் கீழ் ஆணை பிறப்பிக்க கோரப்படுகின்றனர்.

அதன்படி ஊட்டி மாவட்டபதிவாளர் (நிர்வாகம்) ஜனவரி மாதத்தில் 100 புகார் மனுக்களையும், செய்யார் மாவட்ட பதிவாளர் சம்பத் பிப்ரவரி மாதத்தில் 100 புகார் மனுக்களையும், விழுப்புரம் மாவட்ட பதிவாளர் மலர்விழி மார்ச் மாதத்தில் 100 மனுக்களை விசாரணை செய்திட வேண்டும். அவ்வாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம் வரும் 3 மாவட்ட பதிவாளர்களின் தங்கும் மற்றும் உணவு வசதிகளை செய்து தரவும், மேலும், அவர்களுக்கு உதவிடும் வகையில் இப்பணிக்கென 3 மாதங்களுக்கு ஒரு சார்பதிவாளர், 2 உதவியாளர்கள் மற்றும் தமிழ் தட்டச்சு அறிந்த ஒரு டேட்டா ஆபரேட்டர் ஆகியோரை அயல்பணி அடிப்படையில் அமர்த்திட தென்சென்னை உதவி ஐஜி பணிக்கப்படுகிறார்.

Related Stories: