அடுத்த 3 நாட்களுக்கு ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வெப்பநிலை குறைந்தபட்சம் 75, அதிகபட்சம் 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நாளை முதல் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் நேற்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எங்கும் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

Related Stories: