வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 743 கிராம விளையாட்டு மைதானங்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?..உபகரணங்கள் பாழாகி வருவதாக வேதனை

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 743 ஊராட்சிகளில் கிராம விளையாட்டு மைதானங்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிதாக வாங்கிய விளையாட்டு உபகரணங்களும் பாழாகி வருவதால் விளையாட்டு ஆர்வலர்கள் கடும் அதிருப்தி குரல் எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்களையும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க ரூ.76.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 743 கிராம ஊராட்சிகள், 16 பேரூராட்சிகளில் ஊரகவளர்ச்சித்துறை மூலம் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டுத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. இதில் வாலிபல், கபடி, கிரிக்கெட், பேட்மிட்டன் ஆகிய மைதானங்கள் தயார்படுத்தப்பட்டு வந்தது. இதில் கபடி, வாலிபல் மைதானங்கள் கட்டாயம் அமைக்கப்படுகிறது. விருப்பத்தின்பேரில் கிரிக்கெட் அல்லது பேட்மிட்டன் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்தது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 743 மைதானங்களில் 90 சதவீதம் வரையில் மைதானங்கள் தயார் நிலையில் உள்ளது.

ஆனால் மைதானங்கள் தயார் நிலைக்கு வந்தும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், தயார்நிலையில் இருந்த மைதானங்கள் தற்போது, புற்கள் முளைத்தும், சில இடங்களில் வாலிபால் போஸ்ட், சிமென்ட் தடுப்புகள் உடைந்து பாழடைந்து வருகிறது. அதோடு விளையாட்டு உபகரணங்களும் குடோன்களில் போட்டு பூட்டி வைத்து பாழாகி வருகிறது. எனவே 3 மாவட்டங்களிலும் 743 கிராம ஊராட்சிகளில் கிராம விளையாட்டு மைதானங்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. கோடிகளில் செலவு செய்து, அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது விரைந்து செயல்பட்டு, விளையாட்டு மைதானங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று, விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: