16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி

சென்னை: சுனாமி தாக்கத்தின் 16ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கம், காசிமேடு ஆகிய கடற்பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள், அரசியல் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். 2004  டிசம்பர் 26ம் தேதி பெரும் சோகத்தை ஏற்படுத்திய சுனாமி பேரழிவால் தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த நிகழ்வு நடந்து முடிந்து 15 வருடங்கள் நிறைவடைந்து, 16ம் ஆண்டு தொடங்குகிறது.

இதையொட்டி தங்கள் உறவுகளை இழந்த பலரும் நேற்று அந்தந்த கடற்கரை பகுதிக்கு சென்று உறவுகளை நினைத்து பூ தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.  சுனாமி நிகழ்ந்த தினத்தை துக்க நாளாக அறிவித்து மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், திருவொற்றியூர், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக பாஜ மீனவர் அணி சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாஜக மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் மீனவர் அணியை சேர்ந்த ஏராளமானோர் கடற்கரை பகுதியில் சுனாமியின் போது உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி ெசலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜ துணை தலைவர் எம்.என்.ராஜா, பொது செயலாளர் கரு.நாகராஜன், மீனவர் அணி செயலாளர் கண்ணன், சீனிவாசன், மோகன், பண்ணை கணேஷ், பார்த்தீபன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

சர்வமத நலத்திட்டம் என்ற பெயரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் 600 பேருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையிலும், தென்னிந்திய மீனவர் நலச்சங்கம் தலைவர் கு.பாரதி தலைமையிலும், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் கபடி மாறன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களும் மணற்பரப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர் சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: