நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாம் கட்ட திட்டம்: குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

திருப்போரூர்: கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் 2ம் பிரிவாக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்த திட்டத்துக்கான எந்த பணிகளும் நடக்கவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து அவசர அவசரமாக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தின் 2ம் பிரிவுக்கு பேரூர் குடிநீர் திட்டம் என பெயரிடப்பட்டு, ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் ₹6078 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது.கடந்த 2019 ஜூன் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது இத்திட்டம் 2021ம் ஆண்டு முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்துக்கான எந்த பணிகளும் நடக்கவில்லை என தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக தற்போது குழாய்கள் புதைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தற்போது, தொடங்கப்பட்டுள்ள நெம்மேலி கடல்நீர் திட்டத்தின் 2ம் பிரிவு மூலம் தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார்மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், சிறுசேரி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் உள்ள நிறுவனங்களும் பயனடையும் என திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பேர் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்த பிறகே குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும், ஆலை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் மற்றும் கடற்கரை மேலாண்மை ஆணைய ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால் ஜெயலலிதா இருக்கும்போது 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், ஏட்டளவிலேயே இருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் என்பதால் தற்போது அவசர அவசரமாக குழாய் புதைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: