2 சரக்கு கப்பலில் 6 மாதத்திற்கு மேலாக 39 இந்தியர்களை சிறை வைத்த சீனா: குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் அவதி

புதுடெல்லி: லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்து மீற முயன்றதால் கடந்த ஜூன் மாதம் இந்திய, சீன படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதிலிருந்து இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதேபோல், கொரோனா விவகாரத்தில் சீனாவை ஆஸ்திரேலியா கடுமையாக தாக்கிப் பேசியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது.இந்நிலையில், இந்திய மாலுமிகள், ஊழியர்கள் உள்ள 2 சரக்கு கப்பல்களை சீனா தனது துறைமுகத்தில் சிறை பிடித்து வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி எடுத்துச் சென்ற எம்வி அனஸ்டாசியா என்ற கப்பலில் 16 இந்திய மாலுமிகளும், எம்வி ஜாக் ஆனந்த் என்ற கப்பலில் 23 இந்திய மாலுமிகளும் உள்ளனர். இவ்விரு கப்பல்களையும் சீனா தனது துறைமுகத்தின் அருகே தடுத்து நிறுத்தி, சரக்குகளை இறக்க விடாமலும், கொரோனாவை காரணம் காட்டி மாலுமிகளை வெளியேறவோ திரும்பி செல்லவோ அனுமதிக்காமலும் முரண்டு பிடித்து வருகிறது.

ஜாக் ஆனந்த் கப்பல் ஜூன் மாதத்தில் இருந்தும், அனஸ்டாசியா கடந்த செப்டம்பரில் இருந்தும் சீன துறைமுகத்திலேயே நிற்கிறது. இதனால், கப்பலில் குடிக்க கூட சுத்தமான தண்ணீர் இல்லாமல் மாலுமிகள் கடுமையான மன நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை பல முறை கோரிக்கை விடுத்தும் சீனா செவிசாய்க்கவில்லை.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா உடனான உறவுக்கும் கப்பல் விவகாரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கப்பல் மாலுமிகளை மாற்ற முடியாத நிலை உள்ளது,’’ என்றார். அதே சமயம், இவ்விரு கப்பல்களை தவிர மற்ற கப்பல்கள் தங்கள் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படுகிறது.  சீன அதிகாரிகள் எந்த காரணத்திற்காக இந்திய மாலுமிகள் உள்ள கப்பலை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர் என்பது தெரியவில்லை என இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: