பஞ்சாப்பை தவிர அனைத்து மாநிலங்களிலும் வேளாண் சட்ட மசோதாவுக்கு விவசாயிகளின் முழு ஆதரவு உள்ளது: மத்திய அமைச்சர் ஜவடேகர் பேச்சு

சென்னை: பஞ்சாப் மாநிலத்தை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் வேளாண் சட்ட மசோதாவுக்கு விவசாயிகளிடத்தில் முழு ஆதரவு உள்ளது என மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று இந்தியா முழுவதும் 20,000 இடங்களில் விவசாயிகளுடன் பேசினார். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், நேற்று  பாஜ மாநில தலைவர் எல்.முருகன்   தலைமையில், பிரதமருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.  மாவட்ட பார்வையாளர் வேதசுப்பிரமணியம், மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன், ஊரக வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் பாஸ்கர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பலராமன் வரவேற்றார். மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக பாஜ  பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு, 3 வேளாண்  சட்ட மசோதாவின் நன்மைகள் குறித்த புத்தக தொகுப்பினை வெளியிட்டனர்.

 பின்னர், பாஜ மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில், தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அவதூறாக பேசிய மதபோதகர் எஸ்றா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.  இதைதொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் 10 ஆண்டுகள்  மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தை சேர்ந்த  எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் புதிய வேளாண் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்தது. அந்த மசோதாவைன்  தற்போது பாஜ நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப்  மாநிலத்தை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் வேளாண் சட்ட மசோதாவுக்கு விவசாயிகளிடம் முழு ஆதரவு உள்ளது. பிரதம மந்திரியின் விவசாய ஊக்கதொகை ₹18 ஆயிரம் கோடி நேற்று 9 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  திமுக, காங்கிரஸ் என யார் போராடினாலும் வேளாண் சட்டம் ஒருபோதும் வாபஸ் பெறப்படாது என்றார்.

Related Stories: