அருணாச்சல பிரதேசத்தில் நிதிஷ் குமார் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு ஓட்டம்: பிபிஏ கட்சி எம்எல்ஏ ஒருவரும் ஐக்கியம்.!!!

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பாஜ ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த நிதிஷ் குமாரின் 6 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தங்களை  இணைத்துக் கொண்டனர். அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய  ஜனதா தளம் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் பெமா காண்டு ஆட்சிக்கு ஆதரவு அளித்து  வந்தனர்.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆறு எம்எல்ஏக்கள் திடீரென,  ஆளும் பாஜக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதே போல், அருணாச்சல  பிரதேச மக்கள் கட்சியின் (பிபிஏ) எம்எல்ஏ ஒருவரும் பாஜகவில் சேர்ந்துள்ளார். பாஜகவில் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தலீம் தபோ, ஜிகே டகோ,  ஹைங் மங்பி, டோர்ஜி வாங்டி கர்மா, டோங்ரு சியோங்ஜு, கங்காங் டாகு  ஆகியோரும், பிபிஏ எம்எல்ஏ கர்தோ நாக்யோர் ஆகியோரும் அடங்குவர். முன்னதாக  கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி எம்எல்ஏ கர்தோ நாக்யோரை இந்த  மாத தொடக்கத்தில் பிபிஏ கட்சி நீக்கியது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் குமார் கட்சியை  சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்துள்ளது தற்போது பீகார் அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக மற்றும் ஐக்கிய  ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 125 இடங்களை பெற்றது. 115  வேட்பாளர்களை நிறுத்திய ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வென்றது. ஆனால்  பாஜக 110 இடங்களில் போட்டியிட்டு 74 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: