தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலியில், மக்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையாக இன்று கொண்டாடப்படுகிறது. தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், குடில்கள் அமைத்தும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் கிறிஸ்துமஸ்  பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகத்தில் வேளாங்கண்ணி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி  நடைபெற்றது.

அதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும்  கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் பரங்கிமலையில் செயின்ட் தாமஸ் மவுன்ட் தேவாலயம்,  மயிலாப்பூரில் உள்ள பிரகாச மாதா தேவாலயம், எழும்பூர் ரயில்நிலையத்திற்கு பின்புறம் இருக்கும் செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் தேவாலயம், சென்னை செயின்ட் சார்ஜ் கோட்டையில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம், சென்னை ெபசன்ட்  நகர் கடற்கரையில் அமைந்துள்ள லேடி ஆஃப் ஹெல்த் வேளாங்கண்ணி  தேவாலயம் உள்ளிட்ட இடங்களிலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதேபோல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண மின் விளக்குகளால் நள்ளிரவில் ஜொலித்தது. பிறகு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலியின்  போது இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தி வாசிக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது.  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆலயம் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரித்து ஜொலித்தது. இதேபோல் சேலம், திருச்சி என தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: