அனல்மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வை மத்திய நிலக்கரி, மின்்துறை அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களின் பாதுகாப்பு  குறித்த ஆய்வை மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் 6 மாதத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்தது. என்.எல்.சி. விபத்துகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. ஆயுட்காலம் முடிந்த பின்னரும் அனல் மின்நிலைய அளவுகளை இயக்கி வந்த காரணத்தால்தான் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுவதால் இந்த அனல்மின் நிலைய அலகுகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கே.ஆர்.செல்வராஜ் குமார் என்பவரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் விபத்து குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு அண்மையில் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது.

அதில், அனல்மின் நிலைய கொதிகலனை தூய்மைப்படுத்துவதற்கு தனித்த வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பில் நடந்த விபத்திற்கு என்.எல்.சி. நிர்வாகமே பொறுப்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து அனல்மின் நிலைய அலகுகளும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வை மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: